அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு:

மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் பாரிய மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடியும், நீதி கேட்டும் தொடர் போராட்டம் நடாத்தி வரும் வடக்கு- கிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடகிழக்கு முழுவதும் கடையடைப்பு ஹர்த்தால் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அத்தோடு அன்றைய தினம் அவர்கள்  பேரணியும் நடத்த ஒழுங்கு செய்துள்ளனர். இதற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஒத்துழைப்பு நல்குவதோடு  அரசியல் நீதிக்காக கொடுக்கும் அனைத்து சக்திகளையும் ஆதரவு நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. குற்றவாளிகள்  வெளியில் தெரியக்கூடாது. வெளியில் தெரிந்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது. தண்டனை கிடைத்தாலும் தண்டனையை முழுமையாக அனுபவிக்க கூடாது என்ற மனநிலையில் பேரினவாத ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதே சிந்தனையுள்ள எதிரணியினரும் உள்ளனர். சமூக புதைகுழிகள் விடயத்தில் அரசியல் தலையீடு தொடர்ந்துள்ளது என்பதை அன்மையில் இது தொடர்பில் ஆராய்ந்த மூன்று அமைப்புக்களின் கூட்டு அறிக்கை வெளி கொண்டுவந்துள்ளதது.

இந்நிலையில் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் சீருடைகளோடு மனித எச்சம் காணப்படுகையில் சர்வதேச சட்டதிட்டங்கள், நியதிகள் என்பவற்றோடும் சர்வதேச நிபுணர் குழுவினரின் வழிகாட்டலோடும் புதைகுழி அகலப்படவும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான அழுத்தமாகவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து பேரணி நடத்துகின்றனர்.

இனவாத வன் செயல்களால் கொல்லப்பட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டோரை நினைவு கூரக்கூடாது நினைவு கூறினாலும் மீண்டும் அவர்கள் வரப்போவதில்லை என்பதுவே தெற்கின் சிந்தனை. கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் எண்பத்திமூன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல் நடத்தப்பட்ட போது அங்கு குழப்புவதற்காக வந்த குண்டர்கள் கூறினர். அதுவே பேரினவாத மற்றும் மதவாத அரசியல் வாதிகளினதும் கருத்தியல். தமிழர்களுக்கு இனி எத்தகைய நீதியும் இலங்கையில் கிடைக்கப் போவதில்லை இதுவே இன்றைய சூழ்நிலை.

இத்தகைய பின்னணியில் யுத்த குற்றங்களுக்கும், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், கண்டுபிடிக்கப்படும் மனித புதைக்குழிகளின் ஆய்விலும் இலங்கையில் நீதியை அடைய முடியாது. சர்வதேச தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நடத்தும் கடை அடைப்புக்கும், பேரணிக்கும் தாயக தமிழர்கள் ஆதரவு வழங்குவதே அரசியல் நீதி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்