• பிள்ளைதாசன்
  • இலங்கையின் வரலாற்றில் 1983 ஜுலை கலவரம் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்தி இருந்தது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை. இக்கலவரத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் மதம் என்பன செல்வாக்கு செலுத்தி இருந்தமை தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் பலவும் இருந்து வருகின்றன.எனினும் இது போன்ற சம்பவங்கள் இலங்கையில் அவ்வப்போது இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
  • இலங்கைக்கு இனவாதம் புதியதல்ல. இனவாதத்தால் ஏற்பட்ட ரணங்கள் இலங்கை தேசத்தின் தேகத்தில் ஆழமாகவே பதிந்துள்ளன.இலங்கை 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் இனவாத முன்னெடுப்புக்களால் பல்வேறு விபரீத விளைவுகள் மேலெழுந்துள்ளன.சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கை தமிழர்கள்,இந்தியத் தமிழர்கள், முஸ்லீம்கள் என்ற சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் நெருக்கீடுகள் பலவற்றையும் எதிர்கொண்டமை தெரிந்த விடயமாகும்.இந்நெருக்கீடுகள் சுதந்திரம் பெற்ற பின்னரும் தொடர்ந்து கொண்டே இருந்தன.சுதந்திரம் பெற்ற கையோடு இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை மற்றும் பிரசாவுரிமை என்பவற்றை இலங்கையின் பெரும்பான்மைக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பறித்தெடுத்தது.1947 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் கை மேலோங்கிக் காணப்பட்டமை ஐக்கிய தேசியக் கட்சியின் இப் பிற்போக்கு நடவடிக்கைக்கும், எரிச்சலுக்கும் பிரதான காரணமாகும்.1956 ம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் முன்வைக்கப்பட்டு தமிழ் மக்களின் மொழியுரிமைக்கு ஆப்பு வைக்கப்பட்டது.1989 ம் ஆண்டு  இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டது.இதன் ஊடாகவே தமிழ் மொழிக்கு அரசகரும அந்தஸ்து வழங்கப்பட்டது.தனிச்சிங்கள சட்டம் அரசதொழில் வாய்ப்புக்களில் கணிசமான சரிவு ஏற்படுவதற்கு உந்துசக்தியாக இருந்த நிலையில் இது குறித்த இனவாதிகளின் எண்ணமும் கை  கூடியது.
  • மேலும் பல ஒப்பந்தங்கள் முன்வைக்கப்பட்டு சிறுபான்மையினரின் எழுச்சி மழுங்கடிக்கப்பட்டது.அவர்களின் உரிமைகள் பலவும் மறுக்கப்பட்டன.தமிழர்கள் மொழியுரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைக் கோரியபோதும் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப்போனதே  மிச்சமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.அவ்வப்போது தமிழ் மக்களுக்கு எதிரான வன்செயல்கள் ஏவிவிடப்பட்ட நிலையில் 1983 ம் ஆண்டு வன்செயல் உச்சத்தை தொட்டிருந்தது.”இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு.ஏனைய சிறுபான்மையினர் அவர்களுடன் வாழத்தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு சமயம் தெரிவித்திருந்தார்.மேலும் “இலங்கை நாடானது 75 வீத மக்களான சிங்களவர்களுக்கே சொந்தமானதாகும்.
  • சிறுபான்மையினர் எங்களுடன் இலங்கையில் வாழலாம்.ஆனால் அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற அடிப்படையில் சாத்தியமற்ற எதனையும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது.  விடுதலைப் புலிகள் அழித்து ஒழிக்கப்பட்டால் நெடுமாறன், வை.கோ போன்ற தமிழ் நாட்டின் அரசியல் கோமாளிகளும் விடுதலைப் புலிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அனுதாபிகளாய் இருக்கும் ஏனையவர்களும் அவர்களின் வருமானத்தை இழந்து விடுவார்கள்” என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜெனரல் சரத் பொன்சேகா அப்போது தெரிவித்திருந்தார்.இவையெல்லாம் இனவாதத்தின் வெளிப்பாடுகளாகவே அமைந்திருந்தன.ஐக்கியம் மிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இத்தகைய கருத்துக்கள் சவாலாக அமைந்து விளங்குவதாகவும் அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.
  •  *   இனவாதமும் மதவாதமும்
  • இலங்கையின் அரசியல் அமைப்பு மற்றும் வன்செயல்கள் என்பவற்றின் பின்னணியில் மதம் மற்றும் இனவாத அரசியல் என்பன அதீத ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.1970 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் திருமதி.சிரிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா பிரதான சூத்திரதாரியாக விளங்கினார்.இந்நிலையில் சிரிமாவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த கே.எம்.பி.இராஜரட்ண மகா சங்கத்தினர் தமது கருத்துக்களை கூறும் உரிமை உள்ளதென்றும் அவர்களின் கருத்தை அறியும்படியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.இவ்வாறாக அரசியலமைப்பில் மதம் உள்ளீர்க்கப்பட்டது.இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகள் மதச்சார்பற்ற அரசியலமைப்பை முன்வைத்த நிலையில் இலங்கை இதற்கு விதிவிலக்காக இருந்தமை விசனத்திற்குரிய ஒரு விடயமேயாகும்.இனவாதம், மதம் என்பன இலங்கையின் அரசியலமைப்பை ஆக்கிரமித்த நிலையில் ஐக்கியம் என்பது கேள்விக்குறியானது.இந்நிலையில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகமான முறையில் அவ்வப்போது இடம்பெற்ற வன்செயல்களிலும் இனவாதமும் மதமும் இணைந்து செயற்பட்டதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன.இனவாதத்தின் வெளிப்பாடுகள் இன்னும் இலங்கையை விட்டுப் போகாத நிலையில்  மென்மேலும் அதிகரித்து வருகின்ற ஒரு போக்கினையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
  • முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 1978 ம் ஆண்டு பதவியேற்ற நிலையில் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டு வந்தபோதும் பௌத்தத்திற்கு யாப்பின் மூலம் கொடுக்கப்பட்ட அந்தஸ்தில் கைவைக்கத் துணியவில்லை.அப்படியே பேணுவதுதான் தனது ஆட்சிக்கு பாதுகாப்பானது என்று நம்பினார்.அதேவேளை பௌத்தத்தை இலங்கை அரசின் உத்தியோகபூர்வமாக ஆக்கும்படி நிர்ப்பந்தங்கள் எழுந்தன.அப்படி செய்தால் அரசு மேற்கொள்ளும் மதம் தொடர்பான நடவடிக்கைகளின்போது அநாவசிய தலையீட்டுக்கு வழிவகுத்துவிடும் என்று ஜே.ஆர்.கருதியதாகவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.
  • இலங்கையில் இடம்பெற்ற வன்செயல்களில் உச்சத்தை தொட்ட வன்செயலாக 1983 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல் அமைந்து விளங்குகின்றது.இதனால் தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது.தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் பலவும் தீக்கிரையாகிய நிலையில் திட்டமிட்ட பொருளாதார முடக்க நிலைக்கு அவர்கள் உள்ளானார்கள்.இது இனவாதிகளின் எதிர்பார்ப்பிற்கு கிடைத்த ஒரு வெற்றியாக அமைந்தது.
  • வன்செயல்களால் தமிழ் மக்கள் இடம்பெயரவும் நேரிட்டது.
  • இதனடிப்படையில் சிலர் இந்தியாவில் சென்று குடியேறிய நிலையில் இன்னும் சிலர் உள்ளூரிலேயே இடம்பெயர்வினை மேற்கொண்டனர்.குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சென்று குடியேறினர்.இவர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் அதிகமாக சென்று குடியேறியதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.இத்தகையோர் காலப்போக்கில் தங்களின் மலையக அடையாளம் மற்றும் கலாசாரங்களைக் கைவிட்டு உள்ளூர் வாசிகளுடன் கலந்து அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு,விழுமியங்களை வரித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.எனவே கலாசார திரிபுகள் ஏற்படுவதற்கும் 1983 ம் ஆண்டின் ஜுலைக் கலவரம் வித்திட்டது என்றால் மிகையாகாது. இக்கலவரமானது நாட்டில் உள்ள மூளைசாலிகளின் வெளியேற்றத்திற்கும் வித்திடுவதாக அமைந்தது.நாட்டின் சூழ்நிலைகள் கண்ணியமாக தொழிலை மேற்கொள்வதற்கு இடையூறாக அப்போது அமைந்திருந்த நிலையில் இதனாலேயே மூளைசாலிகளின் வெளியேற்றம் அதிகமாகக் காணப்பட்டது.இக்கலவரத்தினால் சிலர் வலது குறைந்த நிலைக்கு உள்ளானமையும் புதிய விடயமல்ல.உள ரீதியான சிக்கல்களுக்கும் இன்னும் சிலர் உள்ளானதாகவும் அறிய முடிகின்றது.
  • *   அர்த்தமுள்ள பிரதிநிதித்துவம் 
  • இந்நிலையில் 1983 ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னணியில் இனவாதத்தைப் போன்றே மதத்தின் ஆதிக்கமும் அதிகமாக இருந்ததனை அறியக் கூடியதாக உள்ளது.இந்த நிலை இன்னும் ஓய்ந்ததா? என்று வினவவேண்டிய தேவையும் மேலெழுந்து காணப்படுகின்றது .
  • ஒவ்வொரு சமூகத்தினதும் அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவம் என்பது அச்சமூகத்தின் பல்வேறு அபிவிருத்திக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்றது.அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஊடாக பல பின்தங்கிய சமூகங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன.எனினும் வெறுமனே நாற்காலிகளைச் சூடேற்றும் பிரதிநிதித்துவங்கள் இதற்கு எதிர்மாறாகவே இருந்து வருகின்றமையும் தெரிந்ததாகும்.இந்நிலையில் இலங்கையில் சிலரின் அரசியல் பிரதிநிதித்துவம் சமூக அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்காது சிறுபான்மை இனங்களை வேரறுப்பதற்கும், அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.இந்நிலையில் இனவாத, பிற்போக்கு அரசியல்வாதிகள் தமது பிழைகளை திருத்திக் கொண்டு முன்செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.இது சாத்தியமாகும் இடத்தே நாட்டில் ஐக்கியம் வலுப்பெறுவதோடு அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்படும்.
  •  “இலங்கையர்” என்றவாறு  ஒரே குடையின் கீழ் நாட்டு மக்கள் ஒன்றிணைவதற்கு இனவாதமும் மதத்தின் ஆதிக்கமும் தடையாக உள்ளது.இவ்விரண்டின் ஆதிக்கமும் வேரறுக்கப்படுமிடத்து சாதக விளைவுகள் பலவற்றையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
  • இலங்கையின் வரலாறுகள் மிகவும் கசப்பானவையாகும்.இதனை நோக்குகையில் இலங்கைக்கு இது ஒரு சாபக்கேடோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.இலங்கை இதிலிருந்து மீண்டெழுதல் வேண்டும்.இந்நாட்டில் பல்லின மக்களும் வாழுகின்ற நிலையில் அவர்களின் உரிமைகள் உரியவாறு உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.சிறுபான்மையினர் இலங்கையில் கிள்ளுக் கீரைகள் அல்லர்.அவர்கள் தன்மானம் மிக்கவர்கள்.
  • இந்நிலையில் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிவு படுத்தப்பட்டு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுதல் வேண்டும்.”ஒரு கண்ணுக்கு மருந்தும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும்” இடும் நிலை தவிர்க்கப்படுதல் வேண்டும்.சகலரையும் சமமாக மதிப்பதற்கு அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • 1983 ஜுலைக் கலவரம் நாட்டுக்கு பல பாடங்களையும் கற்றுக் கொடுத்தது.எனினும் இப்பாடங்களைக் கொண்டு இனவாதிகள் இன்னும் திருந்துவதாக இல்லை.இனியும் இவர்கள் திருந்தாமல் இனவாதத்திலும் சிங்கள மேலாதிக்கத்திலும் மூழ்கித் திளைப்பார்களானால் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக அமையலாம் என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்