
சிங்கள பேரினவாத அரசு 1983 ஆம் ஆண்டு நடத்திய கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் சோசலிச இளைஞர் முன்னணியினால் பொரள்ளை மயானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவு நிகழ்வில் பதற்ற நிலை ஏற்பட்டது.
நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களை கலைக்கும் நோக்கில் சிங்கள இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்டோர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
அமைதிப் போராட்டத்தை நடத்தியவர்களுக்கு எதிராக வேறு ஒரு குழுவினரும் ஒன்றுதிரண்டு நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கலைக்கும் நோக்குடன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
அத்துடன், ஆர்ப்பாட்டப் பேரணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் வைத்து நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு தரப்பினரையும் அவ்விடத்தில் இருந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், நினைவு நிகழ்வினை ஏற்பாடு செய்த குழுவினர் அங்கு விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நினைவு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தவர்களும், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.
