நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாய திட்டம் அடுத்த சில மாதங்களில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு வருடாந்தம் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளாக இருப்பார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய சுற்றுலா சந்தையில் போட்டியிடும் வகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை மாற்றியமைக்க வேண்டும் எனவும் பல்வேறு சமையல் கலைகளைக் கொண்ட வெப்பமண்டல நாடாக இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியங்களை அரசாங்கம் அடையாளங்கண்டுள்ளதாகவும், நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் சமையற் கலையின் முழுமையான பங்களிப்பை பெறுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், ‘டில்மா டீ’ நிறுவனரும், முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மறைந்த மெரில் ஜே. பெர்ணான்டோ இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அளித்த உயர்ந்த பங்களிப்பை இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு முக்கிய பங்காற்றிய மெரில் பெர்னாண்டோ இன்றி இன்று முதல்முறையாக நாம் இங்கு கூடியிருக்கிறோம். இந்த நாட்டின் சுற்றுலாத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் மறக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்த போது எட்ரியன் சேகா நம்நாட்டிற்கு வருகை தந்தார். சுற்றுலாத் தொழிலை எப்படி விரிவுபடுத்துவது என்பது குறித்துப் அவர் விளக்கினார்.

மேலும், இலங்கை வந்திருந்த ஜெப்ரி டோபிஸ், பொட்டிக் ஹோட்டல் எண்ணக்கரு குறித்து பேசினார். இந்த பொட்டிக் ஹோட்டல் எண்ணக் கருவின் மூலம் இலங்கை பெருந்தோட்டங்களில் உள்ள ‘பங்களாக்களை’ பொட்டிக் ஹோட்டல்களாக மாற்றுவது எப்படி என்று குறித்து அவர் விளக்கியிருந்தார்.

இந்நாட்டின் தேயிலை தொழிலுக்கு மாத்திரமன்றி, சுற்றுலாத்துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது. அவர் கொல்கத்தாவில் சமையற்கலை பாடசாலை ஒன்றை தொடங்கினார்.

நாம் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். வங்குரோத்து நிலையில் மீண்ட பின்னர் நமக்கு போதியளவு அந்நியச் செலாவணி அவசியம். அனைத்தும் எளிதில் கிடைக்காது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிபந்தனைகள் உள்ளன. பணத்தை சம்பாதிக்கும் வகையில் நமது சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவது போதாது. வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.

அவர்களில் 2.5 மில்லியன் பேர் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யக் கூடிய ஆற்றலுள்ள சுற்றுலாப் பயணிகளாக இருக்க வேண்டும்.இந்திய மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியும், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர். எனவே, சுற்றுலாத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.

இன்று போட்டியில் பங்கேற்ற இளைஞர்களில் பலர் இன்னும் மூன்று வருடங்களில் இலங்கையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. இவர்களை இந்த நாட்டில் தங்க வைப்பதற்கு மாலைதீவில் உள்ள ஹோட்டல்களில் வழங்கப்படும் மட்டத்திற்கு சம்பளத்தையும் வழங்க வேண்டும்.

நாம் இலக்காகக் கொண்டுள்ள 5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளிடையே பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகள் இருக்கலாம். நம் நாடு சமையற் கலைச் சுற்றுலாவுக்கு சிறந்த பின்னணியைக் கொண்டுள்ளது. நமது சுற்றுலாத் துறையில் சமையற் கலைச் சுற்றுலாவை இலக்காகக் கொண்டால், ஆசியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்கள். அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதற்கான, அதிகளவிலான பணியாளர்களை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டிய அதேநேரம் அதற்குரிய பாடசாலைகளையும் நாம் மேம்படுத்த வேண்டும். மேலும் தனியார்துறை பங்களிப்புடன் சமையற்கலை பாடசாலையொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அரசாங்கம் தனியாக அனைத்தையும் செய்யும் வரையில் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. இதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும். தற்போதும் பல பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் சமயற்கலை தொடர்பிலான பாடசாலைகள் இயங்குகின்றன.  நாம் புதிய சுற்றுலாத் திட்டத்தை ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதமளவில் வெளியிடுவோம். அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்