
1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலைகளின் ஒரு முக்கிய படுகொலை சம்பவமாக பதிவாகிய வெலிக்கடை சிறை படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.
53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட இந்த வெலிக்கடை சிறை படுகொலைகளின் நினைவு கூரல் நிகழ்வுகள் தாயகம் மற்றும் புகலிட நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.
சிறை அதிகாரிகளின் பங்களிப்புடன் தமிழ் அரசியல் கைதிகள் மீதான தமது படுகொலை திட்டத்தின் ஒரு கட்டமாக வெலிக்கடை படுகொலைகள் கறுப்பு யூலை காலகட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
அன்றைய நாளில் கோடாலி, கத்தி, அலவாங்கு சுத்தியல், இரும்பிக் கம்பிகளால் கொடுரமாக தமிழ் கைதிகள் தாக்கிகொல்லப்பட்டிருந்தனர் 25 திகதி 2 மணி முதல் மாலை ஐந்து மணியளவில் முதற் கட்டப் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.
அதில் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த குட்டிமணி, தங்கதுரை ஜெகன் ஆகியோர் உட்பட மொத்தம் 29 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோரின் கண்கள் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெக்கப்பட்டு அவரகளது உடல்கள் குத்திக் கிழிக்கப்பட்டு உறுப்புகள் வெட்டப்பட்டிருந்தன. இரண்டாம் கட்ட படுகொலையில் 18 தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
வெலிக்கடையில் கொல்லப்பட்ட 53 அரசியல் கைதிகளின் உடலங்கள் அவரசரகால சட்டத்தின் கீழ் மரண விசாரணைகளின்றி தகனம் செய்யப்பட்டன.
இந்த படுகொலைகளுடன் தொடர்புடைய சிங்கள கைதிகளுக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தககது.