
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி பொங்கல் வழிபாட்டிற்கு சென்ற தமிழர் தரப்பு மீது பௌத்த துறவிகளினாலும் காவல்துறையினராலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பொங்கலுக்காக அங்கு தீ மூட்டப்பட்டபோது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவராலும், சிங்களவர் ஒருவராலும் சப்பாத்து கால்களினால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது.
அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகைதந்த சைவத்தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில் முல்லைத்தீவு குருந்துார் மலையில் கடந்த 14 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் வழிபாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
குறித்த மனுவை நகர்த்தல் பத்திரம் அணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு இடம்பெற்ற குழப்பங்களுக்கு தாம் காரணம் இல்லையெனவும் பௌத்த இந்து மக்களுக்கு இடையில் குழப்பம் ஏற்படுவதை தடுக்கும் வகையிலேயே பொங்கல் வழிபாட்டை தடுத்து நிறுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு தொல்பொருள் திணைக்களத்தினரை முன்னிலையாகுமாறும், அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
