இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் துாதுவருக்கும் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது நன்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளியிட்டார்.

இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையினால் நடத்தப்பட்ட நிகழ்வையும் கனேடிய துாதுவர் நினைவுகூர்ந்திருந்தார்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, பல்லின சமூகங்கள் வாழும் கனேடிய நாட்டைப் பின்பற்றி இலங்கையில் சமஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள், வடக்கு – கிழக்கின் 80 வீதமான நிலங்கள் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் என்பவற்றால் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றமை, இன, மத, மொழி ரீதியான ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374.8 ஏக்கர் காணிகள் தொடர்பான விவரமும், 2009 இக்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய துாதுவரிடம் விரிவான அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்