1983 ம் ஆண்டு கறுப்பு ஜுலை  தமிழினப்படுகொலை eடந்து இதுவரையில் அப்படுகொலை நாள் நினைவு கூரப்படுகின்றதே தவிர, படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. அது தொடர்பான ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை ஏன்? என்ற கேள்விக்கு சமூக செயற்பாட்டாளர்கள் வழங்கிய கருத்துக்கள்….

             

                 
கே.எஸ்.இரத்தினவேல்,

வழக்கறிஞர்

யாழ்ப்பாணம்.

            பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

எமது நாட்டில் அவ்வப்போது இனக்கலவரங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.இந்நடவடிக்கையின்போது பல்லாயிரக்கணக்கான மக்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் வருவது யாவரும் அறிந்த விடயமாகும்.உயிரிழப்புகள் பலவும் ஏற்பட்டுள்ளன.தமிழர்களின் பொருளாதாரம், தமிழரின் இருப்புக்கள் மற்றும் தமிழரின் ஆதனங்கள் யாவற்றையும் இலக்கு வைத்து தமிழர்களை அடியோடு நிராயுதமாக்குவதே இனக்கலவரங்களின் நோக்கமாகவுள்ளது.அதில் இனவாதிகள் மிகப்பெரிய வெற்றியும் கண்டுள்ளார்கள்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் முன்னணியில் இருந்த தமிழினம் தற்போது உரிமைக்காக போராடி வருகின்றது.”பிச்சை வேண்டாம் நாயைப் பிடி ” என்ற அளவில் தமிழ் மக்களின் நிலைமை இப்போது இருக்கின்றது.1983 இல் இடம்பெற்ற இனக்கலவரத்தைப் பற்றிய ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கென, 83 கலவரத்தின் பின்னர் பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமித்தது.இக்குழுவானது கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம் என்று எல்லா இடங்களுக்கும் சென்று விசாரணையை நடாத்தியது.இதன் பின்னர் உப்புச் சப்பற்ற ஒரு அறிக்கையை அக்குழு வெளியிடப்பட்டது.கலவரம் நடந்ததற்கான பின்புலம் எதுவும் கூறப்படாத நிலையில் இது நடந்தது, இப்படி நடந்தது அதற்கான நட்ட ஈடுகளை வழங்கத்தான் வேண்டும் என்ற வகையில் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டது.எனினும் அரசாங்கத்தின் ஆதரவால் இடம்பெற்ற விடயங்களை ஆணைக்குழு சொல்லத் தவறிவிட்டது.

இதன் பின்னர் 2000 மாம் ஆண்டளவில் மேலுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.இளைப்பாரிய நீதியரசர் சர்வானந்தா இக்குழுவிற்கு தலைமை வகித்தார்.அக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதாக ஞாபகமில்லை.எவ்வாறெனினும் அதன் விளைவாக எதுவுமே நடக்கவில்லை.1983 கலவரங்கள் இடம்பெற்று 40 வருடங்களாகியும் உரிய தீர்வு இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை.இழக்கப்பட்ட அல்லது சூறையாடப்பட்ட சொத்துக்களுக்கு நட்ட ஈடும் வழங்கப்படவில்லை.கலவரத்தின் பின்னால் தமிழ் சமூகம் மிகப்பெரிய இழப்புக்கும், துரோகத்திற்கும் முகம் கொடுக்க நேர்ந்தது.இக்கலவரம் நடந்து 40 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட பலர் இப்போது உயிருடன் இல்லை என்பதையும் கூறியாக வேண்டும்.

கொழும்பைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் தமிழ் மக்களுக்கு இருந்த வீடுகள், கட்டிடங்கள், வர்த்தக நிலையங்கள் எல்லாம் நாசமாகி அது மாற்றானுடைய கையைச் சென்றடைந்தது.இது ஒரு மாபெரும் இழப்பாகும்.இந்த இழப்பினை ஈடு செய்வதற்கு அரசாங்கம் எவ்வகையிலும் முன்வரவில்லை.40 வருடம் கடந்துள்ள நிலையில் எந்த அரசாங்கத்திற்கும் இது பற்றிய உணர்வு கூட இல்லை.ஆனாலும் இந்த விடயத்தை தமிழ் மக்கள் நினைவுகூற வேண்டும்.ஏனென்றால் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் உலகம் உள்ளவரை தெரிந்திருக்க வேண்டும்.தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதோடு , இனவாதிகளால் தூண்டப்பட்ட காடையர்கள் மாபெரும் அநியாயத்தை தமிழ் மக்களுக்கு புரிந்தார்கள்.இந்த விடயம் உலகுக்கு காட்டப்பட வேண்டும்.இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.நினைவுகூறல் நிச்சயமாக இடம் பெறுதல் வேண்டும்.

வேண்டும்.

                   *  என்.நாமதேவன்

                      திருகோணமலை .

                     மூளைசாலிகள் வெளியேற்றம்

இலங்கைக்கு வன்செயல்கள் புதியதல்ல.இலங்கைக்கும் வன்செயல்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.இலங்கையின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1956, 1958, 1960, 1981, 1983, 1986 என்று காலத்துக்குக் காலம் வன்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.அண்மைகாலத்திலும் இது நடந்தேறி இருக்கின்றது.இவ்வன்செயல்களால் பல சேதங்கள் ஏற்பட்ட நிலையில் பலர் இதன் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாது இடம்பெயர்ந்துள்ளனர்.இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட வர்கள்  இடம்பெயர்ந்துள்ளதோடு ஏனையோர் வேறு வழியின்றி இருப்பிடத்தை விட்டு உள்நாட்டில் சில இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.அத்தோடு கலவரத்தால் மூளைசாலிகளின் வெளியேற்றமும் அதிகளவில் காணப்பட்டது.இத்தகைய நிலைமைகள் இலங்கையின் அபிவிருத்திக்கு தடைக்கல்லாக அமையும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

இந்த வகையில்  உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர்கள், சிங்கள மக்கள் செறிவாக வாழுகின்ற காலி, மாத்தறை, இரத்தினபுரி, பலாங்கொடை போன்ற பகுதிகளில் சென்று குடியேறினர்.தமது பேச்சு மொழியைக் கூட சிங்களமாகவோ அல்லது இலங்கையில் வாழுகின்ற இஸ்லாமியர்கள் பேசும் பேச்சுத் தமிழை வருத்தி உள்வாங்கிக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர்.பல சுமைகளுடன் வாழ்ந்துவந்த தமிழ் சமூகத்திற்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதற்கும் கூட யாரும் முன்வரவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகவே தென்படுகின்றது.

இந்த வகையில் 1983 ஜூலை கலவரம் விரிசல்கள் பலவற்றுக்கும் வித்திட்டது.வழமைபோன்றே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கப்போவதாக குரல்கள் ஓங்கி ஒலித்தன.பல வடிவங்களில் விசாரணைகளும் இடம்பெற்றன.எனினும் எல்லாம் முடக்கப்பட்ட நிலையில் இழுத்தடிப்பு நிலைமைகளையே அவதானிக்க முடிந்தது.எப்போது தீர்வு சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.எல்லாம் கேள்விக்குறியேயாகும்.

                       *  எம்.தமிழ்ச்செல்வன்,

                              வறக்காபொலை.

                  தாமதத்திற்கு காரணம் 

இலங்கையில் சிறுபான்மை மக்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் தொடர்ச்சியாகவே முகங்கொடுத்து வருகின்றமை புதிய விடயமல்ல.இதற்கு உந்துசக்தியாக இலங்கையில் பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.இனவாத சிந்தனையாளர்கள் இத்தகைய கலவரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் சில பிற்போக்கான, சுயலாபம் மிக்க அரசியல்வாதிகள் இதன் பின்னணியில் இருந்துள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.பிரச்சினைக்கான தீர்வின் தாமதத்திற்கும் இவ்வரசியல்வாதிகளை காப்பாற்றும் உணர்வு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

1983 இனக்கலவரம் நாட்டின் தேகத்தில் ஆழமான கறையினை ஏற்படுத்தி விட்டது என்றால் மிகையாகாது.தமிழ் மக்கள் வர்த்தக நடவடிக்கைகளில் மேலோங்கி காணப்பட்ட நிலையில் இலங்கையின் பல்துறைசார் எழுச்சிக்கும் அவர்கள் காத்திரமான பங்காற்றி இருந்தனர்.இந்நிலையில் இதனை காணச்சகியாத பிற்போக்குவாதிகள் இம்மக்களின் வர்த்தக நடவடிக்கைகளை ஒடுக்கி அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணமாக்கத் துடித்தனர்.இதன் வெளிப்பாடே ஜுலைக் கலவரமாகும்.

இலங்கை பல்லின மக்களும் வாழுகின்ற ஒரு அழகிய நாடாகும்.இங்கு சகலரும் சகல உரிமைகளையும் அனுபவிக்க உரித்தானவர்கள்.இந்நிலையில் ஒரு மொழி மேலானதென்றோ அல்லது ஒரு மதம் மேலானதென்றோ யாரும் உரிமை கோர முடியாது.எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தைச் சார்ந்தவர்களை அடக்கியாள முடியாது.அவ்வாறு அடக்கியாளும் உரிமையும் அவர்களுக்குக் கிடையாது.நிலைமை இவ்வாறிருக்கையில் சிறுபான்மை இனத்தை ஒடுக்கும் முயற்சியின் ஒரு சம்பவமாக நாம் 1983 ஜுலை கலவரத்தை அடையாளப்படுத்த முடியும்.

ஜுலை கலவரம் நாட்டு மக்களின் ஐக்கியத்துக்கு குந்தகமாக அமைந்தது.ஒரு இனம் இன்னொரு இனத்தை வேரறுப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.இலங்கை வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தை தோற்றுவித்த ஜுலை கலவரத்தின் தழும்புகள் மக்கள் மனங்களில் இருந்தும் இன்னும் நீங்காதுள்ளது. இத்தகைய கொடூரம் இலங்கையில் இனியும் இடம்பெறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

                          *  திருமதி எம்.பார்வதி,

                              நுவரெலியா

                    தொடரும் இனவாதம்  

1983 ஜுலை கலவரம் காரணமாக இந்திய வம்சாவளி மக்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி இருந்தனர்.இவர்களின் வியாபார ஸ்தலங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதோடு பொருட்கள் பலவும் விஷமிகளால் சூறையாடப்பட்டன.சில அப்பாவி உயிர்கள் காவு கொல்லப்பட்ட வரலாறுகள் மிகவும் கசப்பானவையாகும்.இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டில் தொடர்ச்சியாகவே துன்ப துயரங்களை சந்தித்து வந்திருக்கின்றார்கள்.இன்னும் இந்நிலைக்கு முடிவு இருப்பதாக இல்லை.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் இனவாதத்திற்கு குறைவிருக்கவில்லை.1947 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி மக்களின் கை ஓங்கி இருந்தது.இதனால் அச்சமடைந்த ஐக்கிய தேசியக் கட்சி இம்மக்களின் பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தெடுத்தது.இதனால் அம்மக்கள் பின்நாளில் பல்வேறு சவால்களையும் சந்திக்க நேர்ந்தது.அரச உத்தியோகத்திற்கு விண்ணப்பங்கள் கூட அனுப்ப முடியாத நிலையில் அரசின் அபிவிருத்தியும் அவர்களைச் சென்றடையவில்லை.சுதந்திரத்துக்கு முன்னர் டொனமூர் ஆணைக்குழு இம்மக்களுக்கு வாக்குரிமை வழங்க முற்பட்ட நிலையிலும் இவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதால் பயனில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பின.

இந்திய வம்சாவளி மக்களின் செறிவைக் குறைத்து அவர்களை பல துறைகளிலும் ஓரம் கட்டுவதற்கான காய் நகர்த்தல்கள் பட்டியல் அடிப்படையில் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன.இந்திய வம்சாவளியினரை ஒப்பந்தங்களின் ஊடாக மீளவும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புதல்,.தேயிலை விளை நிலங்களை அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரித்து அம்மக்களின் செறிவையும், ஐக்கியத்தையும் பிளவுபடுத்தல் என்பன இதன் வடிவங்களேயாகும்.

ஒவ்வொரு  ஜுலை மாதத்திலும் 1983 ஜுலையை நினைந்து மலையக மக்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களது கண்ணீரின் ஈரம் இன்னும் காயவில்லை.இவர்களின் பிரச்சினைகள் மூடிமறைக்கப்பட்டு பிரச்சினையற்ற சமூகமாக இம்மக்கள் வெளிக்காட்டப்படுகின்றனர்.இது உண்மையல்ல.இந்நிலையில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

                           *  என்.கண்ணன்,

                             அக்கரைப்பற்று

                  விரும்பத்தகாத விடயம்

 1983 ம் ஆண்டு ஜுலையை தொடர்ந்த ஒவ்வொரு மாதமும் கறுப்பு ஜுலை என்று அழைக்கப்பட்டு வருகின்றது.இதன்காரணம் அந்த ஜுலையில் விரும்பத்தகாத விடயங்கள் பலவும் அரங்கேறியதனாலாகும்.கறுப்பு ஜுலை இலங்கை மக்களுக்கு பாடங்கள் பலவற்றையும் கற்றுக் கொடுத்தது.எனினும் இந்தப் பாடங்களை கருத்தில் கொண்டு இனவாதிகள் திருந்துவதாக இல்லை.ஒருவர் தனது மதத்தையும் மொழியையும் கலாசாரத்தையும் நேசிப்பதில் தவறில்லை.ஆனால் அதேபோன்று ஏனைய மதங்களையும் மொழிகள் மற்றும் கலாசாரத்தையும் மதிப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.இதனால் ஐக்கியம் மற்றும் மனிதநேயம் என்பன வலுப்பெறும்.

இனச்சிக்கலுக்கு தமிழீழத்தைவிட்டால் வேறு தீர்வில்லை” என்ற எண்ணத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியதே இனப்படுகொலைதான்- தோழர் செந்தில்- தமிழ்நாடு)

1983 சூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் இன்றளவும் தமிழ் மக்களால் நினைவுகூரப்பட்டு வந்தாலும் அதில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிரானப் புலனாய்வு நடத்தப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை.

இந்த நேரத்தில் தமிழர்களைப்  பற்றி தான் சிந்திக்க முடியாது என அப்போதைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா வெளிப்படையாகவே தெரிவித்தார். இந்திய அரசின் வெளிப்படையான தலையீடும் அப்போதே தொடங்கிவிட்டது. வன்முறைகள் தொடர்ந்த நிலையில் இந்தியாவின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் மறைந்த பி.வி.நரசிம்மராவ் இலங்கை வந்திருந்தார். கலவரங்களை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்களா? இல்லை உங்களால் முடியாது என்றால் நாங்கள் கட்டுப்படுத்தவா? என்று கேட்டார். அதை தொடர்ந்துதான் வன்முறைகள் முடிவுக்கு வந்தன.

பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழர்களிடம் இருந்து எவ்வித முன்னெடுப்பும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால், சூலை படுகொலைகள் தமிழ் மக்களின் மனதில், ”இனச்சிக்கலுக்கு தமிழீழத்தைவிட்டால் வேறு தீர்வில்லை” என்ற முடிவை எடுக்க வைத்தது. போராளிக் குழுக்களை நோக்கி ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் செல்வதற்கு இப்படுகொலைதான் வழிகோலியது.

சுருங்கச் சொன்னால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டு எழச் செய்து பண்புவகையில் இன்னொரு கட்டத்திற்கு மாற்றியது இப்படுகொலை நிகழ்வுதான். தமிழ் மக்களின் அரசியல் தலைமை தேர்தல் அரசியல் தலைமைகளிடம் இருந்து  ஆயுதப் போராட்டத் தலைமைகளுக்கு கைமாறியதும் இதற்குப் பின்னர்தான்.

இந்திய நாடாளுமன்றத்திலேயே அப்போதைய இந்தியாவின் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி,“இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும். இதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார். ஆனால், அப்படி வண்ணனை செய்யத்தக்க வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடக்க வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் எவ்வித கருத்தும் எழவில்லை.

சூலைப் படுகொலைக்கு மட்டுமல்ல, இந்திய அமைதிப் படை செய்த அட்டூழியங்களுக்கு எதிராகவும் பொறுப்புக்கூறல் கோரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வில்லை என்பதை இணைத்துப் பார்க்க வேண்டும். இந்திய படை அக்காலகட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்களுக்கு எதிராக நீதிகோரிய போராட்டங்களை ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் இருந்தாவது அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி கோரிக்கையை எழுப்பக்கூடிய உள்ளார்ந்த அரசியல் வளர்ச்சி நிலை இல்லை.1971 ஆம் ஆண்டை ஒட்டி வங்கதேசத்தில் பாகிஸ்தான் அரசப் படையினர் நடத்திய போர்க்குற்றங்களில் இருந்து தென்னாசியப் பகுதியில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க முடியும். ஆனால், உலகளாவியப் போராட்டங்களில் இருந்து சீரிய படிப்பினைகளைத் தொகுத்து உள்வாங்கி, உட்செரித்து, தீர்மானம் எடுக்கும்போது அவற்றைப் பொருத்தி செயல்படும் பாங்கும் பண்பாட்டும் இன்றளவும் வளரவில்லை.

2011 ஆம் ஆண்டு இளந்தமிழகம் சார்பாக ( அப்போது சேவ் தமிழ்ஸ் என்ற் பெயரில் செயல்பட்டது)“போர்க்குற்ற வரலாற்றில் இராஜீவ் காந்தியும் இராசபக்சேவும்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். அப்போதே, இந்தியப் படைக்கு எதிராகவும் அதன் அரசியல் தலைமை இராஜீவ் காந்திக்கு எதிராகவும் பொறுப்புக்கூறல் முன்னெடுப்புகளை செய்திருக்க வேண்டும் என்று அந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டது. அது ஈழத் தமிழரின் விடுதலை அரசியலுக்குப் பெரிதும் உதவியிருக்கும்.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிரானப் படுகொலைகள் யாவும் தமிழீழ தனியரசுக் கோரிக்கைகான நியாயத்தை மீள் உறுதி செய்தன. அவையாவும் ஆயுதப் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்கு வழிவகுத்தது. அதேநேரத்தில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் தவிர்த்த ஏனைய அரசியல் போராட்டங்கள் மிகவும் அருகிப் போயிருந்தன. ஆயுத போராட்ட வடிவம் மட்டுமே ஒற்றை வடிவமாகப் பாவிக்கப்பட்டது. பிராந்திய, உலகளாவிய வல்லரசுகளும் கூட ஆயுதப் போராட்டத்திற்கே ஆதரவு கரம் கொடுத்தன.  ஈழ விடுதலைப் போராட்டத்தில் மேலோங்கி இருந்த இராணுவாதக் கண்ணோட்டம் இவற்றுக்கு காரணமாய் இருந்தது என சொல்லலாம்.

அதேநேரத்தில் இனவழிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளத்தக்க தமிழீழ தனியரசு என்பது சூலைப் படுகொலைக்கும் அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் ஈடுசெய்யக் கூடிய நீதியாக அமைய முடியும்.

அதிலும் தமிழர்களால் வெற்றிப்பெற முடியவில்லை. காலமும் இடமும் இணைந்த வரலாற்று சூழமைவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தமது வரப்புகளைக் கருத்தில் கொணடு, மாறுகின்ற சர்வதேச நிலைமைகளைக் கருத்தில் எடுத்து, இப்போராட்டத்தின் குறிப்பான சர்வதேச, பிராந்திய தலையீடுகளையும் ஆதிக்கப் போட்டி அரசியலையும் கருத்தில் எடுத்து, அவற்றைக் கையாளவல்ல அரசியல் உத்திகளைக் கடைப்பிடிக்கத் தவறியமை இந்நாள்வரை சிந்திய குருதிக்கும் இழந்த உயிர்களுக்கும் சிதைந்த வாழ்வுக்கும் ஈடுசெய்யவல்ல நீதியைப் பெறமுடியாமல் போனதற்கான முதல் காரணமாக சொல்லலாம்.

அகக் காரணங்களாக சமய, வட்டார வேறுபாடுகளைக் கடந்து தமிழ்த்தேசிய ஓர்மைக்கூடாக வலுவான தமிழ்த்தேசிய அடித்தளத்தை உருவாக்குவதில் உள்ள இடைவெளிகளும்கூட தமிழர்கள் இன்னும் குருதி சிந்திக் கொண்டிருப்பதற்கு வழிவகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்