“தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக – பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது அழிக்கப்பட்டு – உரிமைகளை இழந்து அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாமல் ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தன்னை நேரில் சென்று சந்தித்தபோது மேற்கண்டவாறு கூறியதாகக் குறிப்பிட்ட சம்பந்தன், இந்தச் சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த வியாழக்கிழமை அமெரிக்கத் தூதுவர் என்னை வந்து சந்தித்தார். முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். நல்லதொரு சந்திப்பு. மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை என்னுடன் அவர் பேசினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை, அரசியல் தீர்வு விடயம், தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான மாற்றங்கள், தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து – தமிழ்பேசும் மக்களின் சரித்திர ரீதியான இடங்களை அழித்துவிடும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வடக்கு – கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தின் அதிகரிப்பு மற்றும் வடக்கு – கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் அவரிடம் எடுத்துரைத்தேன்.

இந்த நடவடிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு முரணானவை என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

பொறுப்புக்கூறல் உள்ளிட்ட ஐ.நா. தீர்மானங்களின் பரிந்துரைகளை இலங்கை அரசு இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் அசண்டையீனமாகச் செயற்படுகின்றது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் கூறினேன்.

இந்த விடயங்கள் தொடர்பில் நீங்கள் மௌனமாக – பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது அழிக்கப்பட்டு – உரிமைகளை இழந்து – அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாமல் ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, தமிழ்பேசும் மக்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கூறினேன்.

ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ்பேசும் மக்கள் சுய மரியாதையுடன் – சுய கௌரவத்துடன் – சகல உரிமைகளுடன் சந்தோசமாக வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருமங்களை நிறைவேற்றுவாரா என்று அமெரிக்கத் தூதுவர் என்னிடம் கேட்டார். “நானும் அவரும் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு ஒன்றாக வந்தோம். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் துவேசவாதி அல்லர். அவருக்குப் போதிய ஆதரவு இருந்தால் இந்தக் கருமங்களை அவரால் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தேன்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்