பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை சமூகமாக உள்ளதுடன், பெரும்பான்மையானவர்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மாகாணத் தலைநகரான கராச்சியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒரு இந்துக் கோயில், பழமையான மற்றும் ஆபத்தான கட்டிடமாக அறிவிக்கப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அங்குள்ள இந்து சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சியின் சோல்ஜர் பஜாரில் உள்ள மாரி மாதா கோயில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவர்கள் (அதிகாரிகள்) அதிகாலையில் அதைச் செய்தார்கள், இவ்வாறு நடக்கும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை” என்று அப்பகுதியில் உள்ள பழைய இந்து கோவில்களை கவனித்து வரும் ராம் நாத் மிஸ்ரா மஹராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலின் வெளிப்புற சுவர்களையும் பிரதான வாயிலையும் அப்படியே விட்டுவிட்டனர், ஆனால் உட்புறத்தை முழுவதுமாக இடித்துவிட்டனர்.

இது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்று கூறிய மிஸ்ரா, அதன் முற்றத்தின் அடியில் புதையல் இருப்பதாக கதைகளையும் தெரிவித்தார்.

அதிகாரிகளால் ஆபத்தான கட்டிடமாக அறிவிக்கப்பட்டதால் கோவில் இடிக்கப்பட்டது என்று உள்ளூர் பொலிஸ் நிலையத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் உள்ள மதராசி இந்து சமூகத்தால் இந்த கோயில் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த அமைப்பு மிகவும் பழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயிலில் இருந்த தெய்வங்களை தற்காலிகமாக சிறிய அறைக்கு மாற்றி வைத்துள்ளதாக மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இந்து சமுதாய தலைவர் ரமேஷ் கூறுகையில், 

அந்த இடத்தில் வணிக கட்டிடம் கட்ட விரும்பி போலி ஆவணம் மூலம் நிலத்தை ஒருவருக்கு விற்றதால், கோவில் நிர்வாகத்தினர் சிறிது காலமாக அந்த இடத்தை காலி செய்ய வலியுறுத்தினர்.

சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா மற்றும் சிந்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோர் இந்த விவகாரத்தை அவசர அடிப்படையில் கவனிக்க வேண்டும் என்று இந்து சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை சமூகமாக உள்ளனர். பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்