
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பேரினவாத சிங்களவர்களும், வெறி பிடித்த பிக்குகளும், சிங்கள் காவல்துறையினரும் இடையூறு ஏற்படுத்தி வருவதால் குருந்தூர்மலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, காவல்துறை சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர். பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர்.
அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை.
இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி வேண்டினர். நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்தனர்.
தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தீமூட்ட தயாரான போது, முல்லைத்தீவு பொலிசார் பொங்கலுக்கு தடையேற்படுத்தினர். சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்தனர். இதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டுள்ள நிலையில், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பௌத்தவிகாரை அமைக்க பாடுபட்ட வெலிஓயா பண்சல பிரதம தேரர் தலைமையில் சிங்கள காடையர்கள் பஸ்களில் அழைத்துவரப்பட்டு பொங்கலை குழப்பும் விதமான செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
தொல்லியல் திணைக்களம் சில நிபந்தனைகளுடன் பொங்கலுக்கான அனுமதியினை வழங்கியபோதும் தேரர்களின் எதிர்ப்பினால் பொஸிஸார் பொங்கல் செய்ய முடியாது என தடை போட்டனர். காரணம் தொல்லியல் திணைக்களத்திற்குரிய இடம் என்பதால் நெருப்பு மூட்ட முடியாது எனத் தெரிவித்தனர்.
வழிபாட்டில் ஈடுபட்ட தமிழர்களை சிங்கள பொலிஸார் வலுக்கட்டாயமாக எழுப்பி கலைத்தனர். மேலும் பொலிஸாரல் சிலர் மீது தாக்குத்தலும் நடத்தப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொஸிசார் தரையில் இழுத்தனர்.
இறுதியில் பொங்கலுக்கு எடுத்துச் சென்ற பொருட்களை கட்டாயம் பொங்க வேண்டும் என்ற விடயத்தை பொஸிஸாரிடம் மீண்டும் மீண்டும் முன்வைத்தபோது பொலிஸார் மறுத்துவிட்டனர்.
பொங்கலுக்கு கொண்டு சென்ற பாலினை நிலத்தில் ஊற்றிவிட்டு ஆதிசிவன் ஐயனை வணங்கிவிட்டு தமிழர்கள் திரும்பினர்கள்.
இதே யூலை மாதத்தில் தான் 1983 ம் ஆண்டு தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி 2000 ற்கும் மேலான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன, சிறைகளில் இருந்த 53 தமிழ்க் கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர், 600வரையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர், இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசுமூடிமறைத்து விட்டது.