விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகோரி அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய விவசாயிகள் பேரணியாக அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியூடாக சின்னப்பள்ளிவரை சென்று அங்கிருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை சென்றனர்.

பிரதேச செயலகம் முன்பாக தமது எதிர்ப்பினை வெளியிட்ட விவசாயிகள் அங்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரனிடமும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகரிடமும் கோரிக்கை அடங்கிய மகஜர்களையும் கையளித்தனர்.

சிறுபோக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நெற்செய்கைக்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதுடன் விளைச்சல் குறைவடைந்தமையினால் தாம் பெரும் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசினால் வழங்கப்பட்ட மானியப்பணமும் பணமாக வழங்கப்படாமல் வவுச்சர் மூலமாக வழங்கப்பட்டு கண்துடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகசும் குற்றம் சாட்டினர்.

அதேநேரம் நெல்லின் உத்தரவாத கொள்வனவு விலையினை கிலோ ஒன்றிற்கு 100 ரூபாவாகவும் காய்ந்த ஈரப்பதனற்ற நெல்லினை 120 ரூபா வரை அதிகரித்து விவசாயிகளின் முழு உற்பத்தியையும் அரசு நெற்சந்தைப்படுத்தும் அதிகார சபை மூலம் கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளனர்.

இதேநேரம் தனியாரும் உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் மானிய பணத்தை பணமாக வழங்கவும் அல்லது விவசாயிகள் விரும்பும் உரத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்