கொக்குதொடுவாய் போன்று வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப் புதைகுழிகளை மூடிமறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்களம் தம்வசப் படுத்தியிருக்கின்றதா? என்று மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதை அடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அதனைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதியன்று அவ்விடத்தைப் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான், அங்கு எதிர்வரும் 6 ஆம் திகதி அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறும், அதுவரையில் அப்பகுதியிலுள்ள மனித எச்சங்கள் சிதைவுறாதவண்ணம் பாதுகாக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அண்மையில் (ஜுன் மாதம் 23 ஆம் திகதி) 4 சர்வதேச அமைப்புக்கள் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் நாடளாவிய ரீதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் அவற்றின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன.

அவ்வறிக்கை மிகமுக்கிய பேசுபொருளாக மாறியிருந்த பின்னணியில், இறுதியுத்தம் இடம்பெற்ற மாவட்டமான முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளமையானது, அதுவும் ஓர் மனிதப்புதைகுழியாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், கொக்குதொடுவாய் பகுதியில் முறையான கண்காணிப்புடன்கூடிய அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் பக்கச் சார்பற்றதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினர்.

அதுமாத்திரமன்றி மனிதப்புதைகுழிகள் தொடர்பில் இலங்கை மிகநீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகவும், மன்னார் மனிதப்புதைகுழி உள்ளடங்கலாகக் கடந்த காலத்தில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகளின் பின்னணி குறித்து முன்னேற்றகரமான விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை இவ்வாறான எண்ணிலடங்காத மனிதப்புதைகுழிகளை மூடிமறைப்பதற்காகத்தான் தொல்லியல் திணைக்களம் வட, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான நிலங்களைத் தம்வசப்படுத்தியிருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இவ்விடயம் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் மேற்கொள்ளப் படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்