இலங்கையின் பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு ஏற்றுமதி பொருளாதாரம் மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. இன்றைய நிலையில்  ஏற்றுமதி பொருளாதாரம் என்பது இலங்கைக்கு மட்டுமன்றி இலங்கை மக்களுக்கும் முக்கியத்துவம்வாய்ந்ததாக மாற்றம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி குறித்து சிந்தித்தாலும் அந்த பொருளாதார வளர்ச்சிக்கு வடகிழக்கில் ஏதாவது திட்டங்கள் குறித்து சிந்திப்பதற்கு தவறியே வருகின்றது.மாறாக வடகிழக்கு மக்களுக்கு பயனற்றதும் ஏனைய மாவட்ட மக்களுக்கு பயன்தரக்கூடியதுமான திட்டங்கள் பற்றிமட்டுமே அதிகளவான கவனம் செலுத்துவதானது வடகிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கப்படவேண்டும்.

இலங்கையிலேயே அதிகளவான வளங்களைக்கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.ஆனால் கிழக்கிலிருந்து ஏற்றுமதி பொருளாதாரம் என்பது மிகவும் குறைந்தளவிலேயே இருந்துவருகின்றது.அதிலும் இந்த ஏற்றுமதி பொருளாதாரம் என்பது சிங்கள மக்கள் செறிந்துவாழும் பகுதியிலேயே அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் கிழக்கு மக்களுக்கு பிரயோசனம் குறைந்த ஏனைய பகுதி மக்கள் அதிகளவில் பிரயோசனம் அடையக்கூடிய வகையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் வகையிலும் தமிழர்களின் விரிவாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலான திட்டங்களே கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

இயற்கை வளம்கொண்ட காணிகள் சூரிய மின்கலத்திட்டம் என்ற போர்வையில் அபகரிக்கப்படும் நிலைமையினை இன்று காணமுடிகின்றது.சூரியமின்கல திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவ்வாறான திட்டங்கள் மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக காணப்படுகின்றது.எனினும் இவ்வாறான திட்டங்கள் காணிகள் பாவனைக்குள் இல்லாத பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டும்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலியுடன் இணைந்து இதற்கான காணிகள் பெறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய காணிகளை அபரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தில் இந்த காணி விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்தொண்டமான் அவர்கள் விடாப்பிடியாக இருந்ததை காணமுடிந்தது.

இந்த கூட்டத்தில் கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு இரண்டாயிரம் ஏக்கர் காணிகளை ஒதுக்குவதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த காணிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகள் தமிழர்களின் காணிகளும் சுமார் 400 ஏக்கர் காணிகள் முஸ்லிம்களின் காணிகளும் உள்ளீர்க்கப்பட்ட நிலையில் முஸ்லிம்களின் 400ஏக்கர் காணிகள் விடுத்து தமிழ் விவசாயிகளின் காணிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகளை உள்ளீர்க்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்போது அரசாங்கத்தின் அடிவருடிகள் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கியபோதிலும் தமிழர்களின் வளமான காணிகள் மட்டும் அபகரிப்பு செய்யப்படுவதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்த நிலையினை காணமுடிந்தது.இங்கு கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இதற்கான எதிர்ப்பினை தெரிவிக்காத நிலையில் விவசாயிகளுக்கு மாற்றுக்காணிகளை வழங்கவேண்டும் என்பதை மட்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த பகுதுpயில் அமையப்போகுமி சூரிய மின்சார திட்டத்தினால் வாகரை மக்களோ கிரான் பிரதேச மக்களோ நன்மையடையப்போவதில்லை.ஏன் மட்டக்களப்பு மாவட்ட மக்களோ நன்மையடையப்போவதில்லை.இவ்வாறான திட்டங்கள் கொண்டுவருவதே தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் நோக்குடன் என்பது இன்று கிழக்கு மாகாண ஆளுனர் போன்றவர்களுக்கு தெரியவாய்ப்புகள் இல்லை. ஆனால் கிழக்கு மாகாண தமிழர்களைப்பொறுத்த வரையில் அது நன்கு தெரிந்த விடயமாகும்.

இலங்கையிலேயே அதிளவு நிலப்பரப்பினைக்கொண்டதாக வாகரை பிரதேச செயலகப்பிரிவு எனப்படும் கோறளைப்பற்று வடக்கு பிரதேசம் காணப்படுகின்றது. சனத்தொகையில் வாகரைப் பிரதேசம் 7,820 குடும்பங்களில் 25348பேரைக் கொண்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகமானது சுமார் 550 சதுர கி.மீ அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தின் பரப்பளவில் 20.89வீதத்தை ஐக் கொண்டுள்ளது.அதன் மொத்த நிலப்பரப்பானது நீர்ப்பரப்புக்களையும் சேர்த்துப் பார்க்கும்போது கிட்டத்தட்ட 43.9 சதுர கி.மீ ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசமானது தமிழர்களின் வரலாற்றுபாரம்பரியமிக்க பிரதேசமாகும். இங்கு வாழும் வறிய மக்கள் தான் கடந்தகாலப் போர்ச் சூழலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். வாகரைப் பிரதேசம் சுமார் 30வருடங்களாகக் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

இங்கு கடல்வளம்,ஆற்று நீர்வளம்,காட்டுவளம்,நிலவளம் என அனைத்து வளங்களும் உள்ள போதிலும் இலங்கையில் மிக வறிய நிலையில் மக்கள் வாழும் ஒரு பகுதியாக இப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள வளங்கள் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களுக்கும்ப யன்படுத்தப்படாது வெறுமனே காணிகளை அபகரிக்கும் நோக்குடனுக்கான திட்டங்களுக்கு மட்டுமே காணிகள் வழங்கப்படுகின்றன. கடந்த காலத்தில் அமைச்சராகயிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்காக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் உதவியுடன் ஆயிரம் ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டன.

அங்குள்ள வளங்களைப்பயன்படுத்தி திட்டங்களை மேற்கொண்டு அப்பகுதி மக்கள் தொழில்துறைகளை முன்னெடுத்து தமது வாழ்வாதாரத்தினை முன்கொண்டுசெல்வதற்கு அப்பால் அங்குள்ள வளங்களை தென்னிலங்கையில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கான திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன.

நாங்கள் கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவந்தோம்.புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகள்,தனி நபர்கள் இங்குள்ள வளமான காணிகளை பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்று ஆனால் அவற்றினை கருத்தில் கொள்ளாத நிலையே இன்று இருந்துவருகின்றது.இவ்வாறான நிலையானது எதிர்காலத்தில் பாரியளவில் தமிழினத்தின் அச்சுறுத்தலுக்கு பாரிய ஆபத்து என்பது உணர்வதற்கு தவறிவருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் பொருத்தமற்ற திட்டங்கள் ஊடாக அபகரிக்கப்படும் நிலைமையினை காணமுடிகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் விவசாய உற்பத்தியின் ஊடாக பெறப்படும் நெல்லினை இலங்கை அரசாங்கம் முறையாக கொள்வனவு செய்யுமானால் இலங்கையானது அரசி இறக்குமதியை செய்யத்தேவையில்லையென மட்டக்களப்பு விவசாயிகள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.தமிழர்களின் பொருளாதாரம் வளர்ந்துவிடும் என்பதனால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் இருப்பினையும் வளர்ச்சியையும் இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.இன்றைய நிலையில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை கூட வடகிழக்கில் நடைமுறைப்படுத்த நிர்வாகம் பின்னடிக்கும் நிலையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தமிழர்களின் காணி அபகரிப்பும் மற்றும் பொருளாதார முன்னேற்றும் குறித்து சிந்திக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் கிழக்கு தமிழ் மக்களுக்கு உள்ளது.

வாகரை கிராண் போன்ற பகுதிகளில் உள்ள காணிகளை இயற்கையினை பாதிக்காத வகையில் மக்களின் பொருளாதார வளர்ச்சியைக்கொண்ட திட்டங்களுக்கு ஒதுக்கீடுசெய்யவேண்டுமே தவிர சூரியசக்தி மின்கல திட்டம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதனால் எதிர்காலத்தில் சூழல் பாதிப்புகளை எதிர்நோக்குவதுடன் தமிழர்களின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கமுடியாத சூழல்நிலையுருவாகலாம்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் எஞ்சியுள்ள காணியிலாவது தமிழர்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உற்பத்திகளை முன்னெடுப்பதற்கு முன்வரவேண்டும்.இன்று மட்டக்களப்பில் வாழை உற்பத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது.அவற்றினை ஏற்றுமதிசெய்யும் வகையில் இன்று உற்பத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.இவ்வாறான உற்பத்திகளுக்கான களம்

ஏற்படுத்தப்படவேண்டும்.புலம்பெயர்ந்துள்ள வர்த்தக சமூகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலைமைகள் குறித்து சிந்திக்கவேண்டும்.இங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு கைகொடுக்க முன்வரும்போது எதிர்காலத்தில் மேலும் பல உற்பத்தியாளர்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.இதன்மூலம் எஞ்சியுள்ள தமிழர்களின் நிலங்களை பாதுகாப்பதற்கான சூழ்நிலையும் உருவாகும்.நிலைமையினை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்