மட்டக்களப்பில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி!

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதன வீதியில் 14 கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனும் இடமுள்ளது. அங்குள்ள பிரதான சந்தி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தச் சந்தியின் மேற்கே (பதுளை வீதி) கறுத்தப்பாலமூடாக மகாஓயா செல்லும் வீதியில் 13 கிலோமீற்றர் தொலைவில் கரடியனாறு எனும் பழமையான தமிழ்க்கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் வடமேற்குத்திசையில் 03 கிலோமீற்றர் தொலைவில் குசலான்மலை அமைந்துள்ளது.

கிழக்கிலங்கையின் மையப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலத்தில் காணப்படும் பதுளை வீதியில் கரடியனாற்றில் அமைந்துள்ள தமிழர்களின் வரலாற்றை கொண்ட பல வரலாற்று ஆவணங்கள் புதைந்து கிடக்கும் ஆலயமாக குசலானமலை குமரன் ஆலயம் காணப்படுகின்றது.

கரடியனாறு கிராமத்துக்கு வடபுறம் உள்ள அழகிய மலைக் கிராமம் அது. 2000 வருடங்களுக்கு முன்பு இங்கு ஆதித்தமிழர்கள் வாழ்ந்ததற்கான தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அங்கு வாழ்ந்த தமிழர்களின் வழிபாட்டு முறையாக வேல் வழிபாடும் நாக வழிபாடும் இருந்ததற்கான தடயங்கள் ஆதாரங்கள் நிறையவே அங்கு உள்ளன.

மட்டக்களப்பில் தமிழரின் வரலாற்றை பேசும் குசலானமலை முருகன் ஆலயம்!
கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபையிலுள்ள இந்தியாவின் பழனிமலை போன்ற முருகனின் திருத்தலம் (கரடியனாறு குசலானமலை)

இலங்கையில் ஆதித் தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர். இம்மலை தாந்தாமலை பிள்ளையார் ஆலயத்தையும் உகந்தைமலை வள்ளி அம்மன் ஆலயத்தையும் நினைவுபடுத்துகின்றது.

உகந்தை மலையைப் போல குசலான்மலை சுமார் 250அடி உயரமுடைய தட்டையான அமைப்புடைய குன்றாகும். 200அடி நீளமும் 100அடி அகலமும் உடைய இக்குன்றில் சுனைகள், பத்துக்கும் மேற்பட்ட குகைகள், படிக்கற்கள் காணப்படுகின்றன.

குசலானமலை பற்றிய அப் பிரதேச மக்களின் கருத்துக்கள்!
குசலானமலைப் பற்றிய ஆரம்பம் சுமார் முப்பது தலைமுறைகளாக (சுமார் 2000 வருடங்களுக்கு முதல்) காணப்படுகின்றதாம். 30 தலைமுறைகள் என குறிப்பிடப்படுகின்றமைக்கு காரணம் இம் மலை மீது முருக வழிபாடு சுமார் 30 தலைமுறைகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையே ஆகும்.

இம் மலையில் மனிதனுக்கு தென்படாத பல வகையான மர்மமான விடயங்கள் காணப்படுகின்றதாம். தற்போதும் இம் மலையில் பூதங்கள் புதையல்களை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதாகவும் இம் மலையில் கண்ணுக்கு புலப்படாத குகை காணப்படுவதாகவும் அத்துடன் வேடுவ இனத்தர்கள் மலையின் ஒரு பகுதியில் வாழ்வதாகவும் அவர்கள் ஆமைகுத்தி மக்கள் என அழைக்கப்படுவதாகவும் முற்காலத்தில் வாழ்ந்த மன்னன் ஒருவன் மலையினை ஒளிந்து வாழ்வதற்காக பயன்படுத்தியதாகவும் குசலானன் எனும் தமிழ் மன்னன் வாழ்ந்த இடம் குசலான மலை என பெயர் பெற்றதாகவும் மக்கள் கூறுகின்றனர் அத்துடன் இங்கு காணப்படும் முருகன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் குறிப்பிடுகின்றனர்.

இப் பகுதியில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளும் காலத்தில் இம் மலையில் புதையல்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூதங்கள் முற்றிய நெல்களைக் கொண்டு இம் மலை மீது வைத்து தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்துக் கொள்ளுமாம் இச் சம்பவத்தினை இங்கு வாழும் மக்கள் நேரடியாக பார்வையிடாத போதிலும் இச் சம்பங்கள் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இம் மலைப் பகுதியில் காணலாம் என குறிப்பிடுகின்றனர்.

குசலான மலையில் புதையல்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டமைக்கு சான்றாக இங்கு தோண்டப்பட்ட கிடங்குகள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது அவற்றினுள் புற்கள் வளர்ந்து பற்றையாக காட்சியளிக்கின்றன.

இவ் ஆய்வுப் பயணத்தை மேற்கொள்ளும் போது மலை அடிவாரத்தில் வசிக்கின்ற மக்கள் நண்பகல் வேளையில் ‘வேடுவ’ இனத்தைச் சேர்ந்தவர்கள் இக் கோவிலுக்கு வந்து இங்கு குடிகொண்டிருக்கும் இறைவனை வணங்கி பூசைகளை மேற்கொள்வதாகவும் இவ்வின மக்கள் ஆரம்பத்திலிருந்து இங்கு காணப்படும் இறைவனை ‘குமாரத் தெய்வம்’ என்கின்ற வடிவமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.

சிறப்பம்சங்கள்!
அங்கு பத்துக்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன. அவற்றில் ஆதி தமிழர் வாழ்ந்த எச்சங்கள் காணப்படுகின்றன. அங்கு 07 ஆதிதமிழரின் தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் உள்ளதாக பிரபல தொல்லியலாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் குறிப்பிடுகின்றார்.

புராதன கட்டடமொன்று காணப்பட்டதற்கான பழைய செங்கற்கள் அங்கு காணப்படுகின்றன. இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த புதையல்கள் திரவியங்கள் புதையல் மீட்புக்காரர்களால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திசன் பெருமகன், தேவகுத்தன், அபயன், நாகன், சுதசனன், குத்தன், சுதினன், சமனன், கஹபதி போன்ற ஆதித் தமிழ்ப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்கு ஆதி தமிழர்கள் வணங்கிய குலதெய்வம் வாழ்ந்த குகைகளையும் ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சக பௌத்தர்களிடம் வழங்கியதாக பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுக்களில் பொறித்துள்ளனர்.

குசலான மலையின் உச்சியில் காணப்படும் குளமானது எக்காலத்திலும் வற்றாது நீர் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.

இம்மலை உச்சியில் பண்டைய காலத்து வேல் தாங்கிய சிறுகோயில் இருந்தது.

குசலான் மலை அருகிலுள்ள 7 சிறு குன்றுகளுக்கும் மத்தியில்தான் கரடியனாறுக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது. முந்தெனி ஆற்றால் இக் கரடியனாறுக்குளம் இயற்கையாக உருவாகியதென்பது தெரிந்த விடயமே. 1948இல் இக்குளத்தின் அருகில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டு நீர்த்தேக்கமாகியது.

குசலான் மலையில் வேல் நாக வழிபாடு!
2000 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த தமிழர்களின் வேல் வழிபாடும் நாக வழிபாடும் இருந்ததற்கான தடயங்கள் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. அங்கு நாகநாதருக்கு பூஜை செய்த இடங்களை இன்றும் காணலாம். மலையடியில் கொத்துப்பந்தல் அமைத்து பொங்கலிட்டு இவ்வழிபாட்டைச் செய்துள்ளனர். இன்றும் பாம்புப்புற்றைக்காணலாம்.

அன்று கரடியனாற்றில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் வேல் வழிபாட்டையும் நாகவழிபாட்டையும் தொடர்ந்து செய்துவந்தனர்.

அங்கு மலையில் தற்போதுள்ள ஆலயம் 4 சிறு மண்டபங்களைக்கொண்டு காணப்படுகின்றது. இருபக்கங்களிலும் 4 தூண்கள் வீதம் 8 தூண்கள் காணப்படுகின்றன. கருவறையில் முருகப்பெருமான் வைக்கப்பட்டுள்ளார். கூடவே விநாயகரும் கற்சிலையாக வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் முருகனின் 3 வேலாயுதங்களும் வைக்கப்பட்டுள்ளன.

குசலானமலையினை சூழவுள்ள பொருளாதார நிலை
இக் குசலான மலையினை சுற்றி பிரதானமாக நெற் பயிர்ச் செய்கை நடைபெற்று வருகின்றது. இந் நெற்பயிர் செய்கையானது மழை நீரினையும் இங்கு காணப்படும் கரடியன் குளத்தினையும் நம்பியே மேற்கொள்ப்படுகின்றது. இப் பயிர்ச் செய்கை ஆடி மாதத்தின் கடைசியில் இருந்து மாசி மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

இப் பிரதேசத்தில் அடுத்தாக காணப்படும் பயிர்செய்கை சேனைச் செய்கையாகும். இப் பயிர்செய்கைக்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் பயிர்செய்ய வேண்டும் என்கின்ற காலவறையறை இல்லை. பிரதான பயிராக சோளன், கச்சான், மரவள்ளி போன்றன பயிரிடப்படுகின்றன.

குசாலன மலைக்கு அருகில் காணப்படும் ‘கரடியன் குளத்தினை’ அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்தொழில் இப்பிரசேத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இக் குளத்தில் காணப்படும் பிரதான வகையான மீன்கள் கோல்டன், பனையான், கச்சபொட்டியான், விரால் போன்றனவாகும்.

இக் குசாலனை மலைப் பிரதேசமானது மந்தை வளர்ப்பிற்கும் ஏற்றதொரு பிரதேசமாக காணப்படுவதால் இங்கு மந்தை வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகின்றது. கோழி, ஆடு, மாடு போன்றன இங்கு வளர்க்கப்படுகின்றன.

குசலானமலையினை சூழவுள்ள பிரதேசத்தின் காலநிலை
இலங்கை நாட்டின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசமே இக் குசலான மலையாகும். இப் பிரதேசமானது இலங்கையின் வெப்ப வலயத்தில் அமைந்துள்ளதால் வெப்பம் அதிகமாக காணப்படும். சராசரி வெப்பநிலையாக 27°C தொடக்கம் 35°C வரை காணப்படுகின்றது. அத்துடன் வெப்ப காலத்தில் மாலை வேளைகளில் குளிருடன் கலந்த காற்றும் வீசுகின்றது.

இப் பிரதேசத்திற்கு மழைவீச்சியானது ‘வடகீழ் பருவக்காற்று’ மூலமே கிடைக்கின்றது. அதிகமாக மார்கழி மற்றும் தை மாதங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.

குசலானை மலைப் பிரதேசத்தில் ஏற்படக் கூடிய இடர் மற்றும் அனர்த்தங்கள்
குசலானமலை இயற்கை எழிலுடன் காணப்பட்டாலும் சில சந்தர்ப்பங்களில் அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளாகின்றது.

  • வருடத்தில் அதிக வெப்பம் காணப்படுவதால் வரட்சி காலங்களில் நீருக்குரிய பற்றாக்குறை ஏற்படுகின்றது.
  • வடகீழ் பருவக்காற்று வீசும் காலங்களில் அதிக மழை வீழ்ச்சி மூலம் இங்கு காணப்படும் கரடியன் குளம் நிரம்பிவிடுவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு வயல் நிலங்கள் மற்றும் பாதைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
  • இங்கு மிருங்களினால் ஏற்படும் இடர்களும் அனர்த்தங்களும் ஏற்படுகின்றன குறிப்பாக யானைகளில் அட்டகாசச் செய்றபாடுகளைக் குறிப்பிடலாம்.

குசலான மலை முருகன் கோயில் வருடாந்த திருவிழா!

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறித்த ஆலயத்தின் மகிமையினையும் அதன் வரலாற்று சிறப்பினையும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் கடந்த ஏழு வருடமாக இங்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

எனவே இத்தகைய சிறப்பு மிக்க எம் மண்ணின் சொத்தை பிரபல்யப்படுத்துவதுடன் எம் மண்ணை பாதுகாப்போம் வாரீர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்