
“இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்” என்பார்கள். போனா அஞ்சு வருசத்துக்கு வரேலாதாம், வரக்கேட்டா; துண்டுகுடுக்கிற நாளில இருந்து தண்டனை செய்யோணுமாம் என்பார்கள்.
கண்முன்னே பழகியிருந்து விட்டுப் போனவர்கள் சிலரை மீளக் காணக் கிடைப்பதில்லை. “விடுமுறையில் ” வாற அண்ணையாக்கள்/ அக்காக்களைக் கண்டால் தனிமரியாதை தானாக உருவாகும். உடையணிதலிலும் தலை வாருதலிலும் ஓர் நேர்த்தியிருக்கும்.
மணிக்கூட்டை உள்வளமாகத் திருப்பிக் கட்டியிருக்கிறார் என்பதே உலக அதிசயமாகப் பார்க்கப்படும்.
பெரிதாகப் பேசமாட்டார்கள், அமெரிக்கா, கனடாவிலிருந்து பத்து வருசத்துக் கொருமுறை வருபவர்களைவிடவும், இயக்கத்தில இருந்து விடுமுறையில வீட்ட வாறவருக்கு மரியாதை பத்துமடங்கு அதிகம்.
எப்போது திரும்பிச் செல்லுவோம் என்றும் சொல்வதில்லை. “அடுத்தமுறை நான் வருவனோ, வித்துடல் வருதோ தெரியா ..” என இலகுவாகச் சொல்லிச் சென்றுவிடுவார்கள்.
அருகில் எங்காவது சண்டைச் சத்தம் என்றாலோ, கனபேர் வீரச்சாவாம் என்றாலோ “ஆர் பெத்த பிள்ளையளோ” என முழு ஊருமே ஏங்கும் அன்புக் குரியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அதிலும் கூந்தலை நறுக்கிய இளம் பெண்கள், இடுப்பில் இராணுவப்பட்டியும் கழுத்தில் குப்பியும் அணிந்த “போற்றுதற்குரிய நவநாகரிகம்” அந்த மண்ணில் மட்டுமே உருவானது.
ஊர்திகளைச் செலுத்திவருவது ஆணா/பெண்ணா என அடையாளம் காணமுடியாத் தேசமாக அது இருந்தது. தோள்களில் ஏந்தப்பட்ட ஆயுதங்களும் இருபாலாருக்கும் ஒன்றுதான், ஆனால் ஆண் உளச்சீர்மை கொண்ட ஆணாகவும், பெண் கலாசாரமும், கற்பும், கீர்த்தியும் தவறாத பெண்ணாகவும் இருந்தார்கள்.
அங்கேயும் காதலித்தவர்கள் உண்டு, ஆனால் திருமணத்தின் பின்பும் மண்ணைக் காதலித்த காதலர்களாக இருந்தார்கள்.
மதுவும், புகையும், சீட்டாட்டமும் அற்ற
உலகின் ஒரேயொரு இராணுவத்தின் அங்கத்துவர்களாக அவர்கள் மகிழ்ந்திருந்தார்கள்.
நண்பரின் புதைகுழிகளில் மண்போட்ட பின்பு, அழுதுகலங்காத நட்பாக இருந்தார்கள். அந்த நட்பின் கனவையும் சேர்த்துத் தோளில் தாங்கும் தோழர்களாக வாழ்ந்தார்கள்.
காவியங்களிலும், கற்பனைகளிலும் கதைகளிலும் மட்டுமே கேட்ட சம்பவங்களை அவர்கள் “வரலாறுகளாக” எழுதித் தீர்த்தார்கள்.
அவர்களாயிருக்க எல்லோராலும் இயலாது அது தனித்தன்மைகளின் பிறப்பிடம், தாகங்களின் தோற்றுவாய்…
பிரதி:
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0YYmx7sgpHVwMPgncTPVhY8XBLgcvBnvUHjo1d3K7umEwwhEQCLg1qjoRFsDaFfNtl&id=100044365666724