மரியதாஸ் மாஸ்ரர் பற்றி உடன்பயணித்த போராளிகளின் பதிவு:

தமிழீழ தேசம் தன் பூர்வீக இருப்பின் நிறுவுகையூடாகவும், தன்னைத்தானே ஆளுகை செய்யும் அத்தனை ஆற்றல்களூடாகவும், ஆய்வு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், யதார்த்தப் புறநிலைகளூடாகவும் தன்னைச் சுதந்திரமாக விடுவித்துக் கொள்வதற்காக எத்தணிக்கும் இலட்சியப் பயணத்திலே, காலத்திற்குக் காலம் பல பேராளுமைகளை துறைசார்ந்த வகையிலே பிரசவித்துக்கொண்டே இருக்கின்றது.

இயற்கையின் வழித்தோன்றலாக காலம் சுட்டும் ஓர் பெரும் வரலாற்றின் அடையாளத் திரட்சியில் பூமிப்பந்தின் பேசுபொருளாக புலப்படும் “தமிழீழம்” என்ற அழகிய தேசத்தாயின் மடியில் உறுதியாலும், உணர்வாலும், மக்கள் அணியத்தாலும், அறிவியலாலும், இராணுவ, அரசியல், இராஜதந்திர மற்றும் புலனாய்வு நுணுக்கங்களாலும் முன்தெரியப்பட்ட தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகளாக திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல்வேறுபட்ட பேராளுமைகளை தன்னகத்தே கொண்டிருந்த வரலாற்றைக் காலம் எப்போதும் கோடிட்டுக் கொண்டேயிருக்கும். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் ஆளுமைத் திறனுக்கு உட்பட்ட அப் பேராளுமைகளின் உழைப்பின் அறுவடைக் கனதியால் நிறைந்த ஒரு காலத்தில் உலக வல்லாண்மைகளின் புருவங்களை உயர்த்தி வியக்கவைத்தது என்றால் மிகையாகாது.

புலனாய்வுத் துறையின் நுண்ணிய பக்கங்களின் பக்கவேர்களாகத் திகழ்ந்து, புலனாய்வு விளைவின் வீரியங்களாகக் காணப்பட்ட சரித்திரப் பக்கங்களில் “மரியதாஸ் மாஸ்டர்” எனப் பேரன்புகொண்டு அழைக்கப்படும் வின்சென்ற் வில்லியம் மரியதாஸ் அவர்களும் துலக்கம் கொள்கின்றார். வடதமிழீழ தேசத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின், சுன்னாகம் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த இவர் இயல்பாகவே கல்விப்புலத்தால் மேம்பட்டு, பூகோள அரசறிவியலால் சிறந்து, கணிதமாமேதையாகவும் திகழ்ந்தார்.

காலமுணர்த்தும் கடமைகளின் வாயிலாக தேசவிடியலுக்காய் தம்மாலான பணிகளை தாராளமாக ஆற்றவேண்டுமென்ற சுய சிந்தையின் வெளிப்பாடாக தன்னை தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் மாபெரும் வரலாற்று இயக்கத்தின் பிரதான மூளையாகத் திகளும் புலனாய்வுத் துறையின் பகுதிநேர உழைப்பாளராக தன்னை இணைத்துக்கொண்டு, தகவல்ப் பரிமாற்றப் பாதையிலே உழைத்தார். செயலின் தெளிவும் கூர்மையும் மேலோங்கி துல்லியமான இலக்குகளின் வேண்டப்படும் தரவுகளை அணியமாக்கும் சிறந்த பக்குவப் பேற்றின் பயனாக, தேசம் தாண்டிய பணிகளிலும் பங்கெடுக்கும் தலையாய பொறுப்புகளுக்குள்ளும் ஈர்க்கப்பட்டார். இந்த மகத்தான உழைப்பின் காலப்பகுதியில் எதிரியின் சந்தேகப் பார்வைக்குள் அகப்பட்டு கடும் சித்திரவதைக் கூடங்களில் காலத்தைக் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைசுமந்து பின்னர் மீண்டு கரைசேர்ந்தார்.

சிறைவாழ்வைத் தாண்டிய பின்னர் வலியின் உச்சத்தால் இயல்பாகவே ஓய்வுதேடும் பெரும்பாலான தனிமனித எண்ணங்களைப் போலல்லாது…..முன்னரை விடவும் பன்மடங்கு பணியாற்ற வேண்டுமென திடம் கொண்டார். பகுதிநேரப் பணிகளிலிருந்து படிமுறை மாற்றமாக மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக முழுநேரப் போராளியாக தன்னை உருவகித்துக் கொண்டார். தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக சதா காலமும் ஓய்வின்றி உழைக்கும் போராளியாக துறைசார்ந்து, மரியதாஸ் மாஸ்டரும் ஒருவரானார்.

தனக்கே உரித்தான சிறந்த ஆசிரியப் பண்புகளால், கல்விப்புல மேலாளுமையால், ஆங்கில மொழி விருத்தியால் புலனாய்வுப் பணிதொடரும் போராளிகளின் உயிர்மெய் நேய திசைகாட்டியானார்.

புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் மற்றும் துணைப் பொறுப்பாளர் கபிலம்மான் ஆகியோரதும் ஏனைய பகுதி மற்றும் நிருவாகப் பொறுப்பாளர்களினதும் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாகி பணி தொடர்ந்தார்….. புலனாய்வுத் துறையின் மொழிபெயர்ப்பு மற்றும் ஆவணப் பகுதியில் முக்கியமானதும், முதன்மையானதுமான பல்தேசிய புலனாய்வுக் கட்டமைப்புக்களின் புத்தகங்களை, கட்டுரைகளை மொழியாக்கம் செய்து அதனை சக போராளிகளின் நுண்ணறிவுத் திறனுக்கு பயனுள்ளதாக கையளித்தார்.

துறைசார்ந்த போராளிகளின் பார்வைக்கு மட்டுமான உட்சுற்று வெளியீடாக வரும் “புலனாய்வுப் பார்வை” எனும் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் மரியதாஸ் மாஸ்டரும் ஒருவராகப் பணியேற்று புலனாய்வுத்துறைப் போராளிகளின் வளர்ச்சிப் பாதைக்கு உரமேற்றி, அறிவால் மேம்படுத்த அயராது உழைத்தார்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான கடமையென்பது அவ்வினத்தின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனித்துவ உரித்தானதாக உணரப்பட்டபோது, ஒவ்வொரு குடும்பத்திலும் தமக்கான பங்களிப்பையும், பங்கேற்பையும் தாமாகவே தீர்மானித்துக் கொண்டமையானது மரியதாஸ் மாஸ்டரது வழித்தடத்தில் அவரது மகன் கடற்கரும்புலி லெப்.கேணல். மதியழகனாக 20.01.2009 அன்று சுண்டிக்குளம் கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து வீரகாவியமானான். தந்தையும் மகனுமாக இலட்சிய வேட்கயை தாங்கிப் பயணித்த தருணங்களை தமிழீழ தேசம் மறந்துவிடாது.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்