
மன்னார், மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது வீடுகள் அல்லது கூடாரங்களில் இருந்து பொழுதுபோக்குவதை தவிர்த்து, ஆராதனைகளில் கலந்துகொண்டு அன்னையின் ஆசியை பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிமேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார், மடு தேவாலயத்தின் ஆடி மாத திருவிழா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்கள் ஒத்துழைப்பினாலேயே திருவிழாவை சிறப்பாக கொண்டாட முடியும்.
இந்த ஆடி மாத திருவிழாவுக்கு தற்போது அதிகமான பக்தர்கள் வந்துவிட்டார்கள்.
கடந்த ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதால் பெரும்பாலான பக்தர்கள் இவ்விழாவுக்கு வருகை தர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இம்முறை இவ்வாறான பிரச்சினைகள் இல்லாததால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
மடு திருத்தல வளாகத்துக்குள் யாத்திரிகர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள 580 வீடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் பலர் இப்போது கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கின்றனர்.
இன்றைய நிலையை பார்க்கும்போது மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஜூன் 29ஆம் திகதியிலிருந்து ஜூலை 3 ஆம் திகதி வரை விடுமுறை தினங்கள் அமையப்பெற்றுள்ளதால் அதிகமான மக்கள் இவ்விழாவுக்கு வருகை தருவதாக தெரியவருகிறது.
ஆகவே, இத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியம் உண்டு. இதில், அரச தரப்பினரதும் ஏனையவர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். மாவட்ட அரசாங்க அதிபரின் திட்டங்களுக்கு கீழ் யாவரும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என நினைக்கின்றேன்.
மேலும், மடு திருத்தலத்துக்கு யாத்திரிகர்களாக வரும் பக்தர்கள், இங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது வீடுகளில் அல்லது கூடாரங்களில் இருந்து பொழுது போக்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
திருவிழாவுக்கு முதல் நாள் அதாவது ஆடி மாதம் முதலாம் திகதி மாலை ஆராதனை 6 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமாகும். அதன் பின்னர் திவ்விய நற்கருணை ஆராதனையுடன் திருச்சொரூப பவனியும் ஆசீரும் இடம்பெறும்.
ஜூலை 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், இதைத் தொடர்ந்து 6.15 மணிக்கு ஆயர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
அதனை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனியும் ஆசீரும் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.


