

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவே மக்கள் மிகுந்த குழப்ப நிலைக்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (28) பொலன்னறுவையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு மூலம் என்ன நடக்கும் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது ஜனாதிபதியின் கடமை எனவும், மக்களுக்கு தகவல்களை மறைப்பதன் மூலம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படலாம்.
அரசாங்கம் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும்,ஆனாலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு முறையான விளக்கமளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டு வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை என்றும்,முறையான கணக்கெடுப்பை நடத்தாமல் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார்.
இதனால் இன்று இத்திட்டம் நாட்டிற்கு பெரும் தலையிடியாக மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக பேரூந்து வழங்கும் திட்டத்தில் 72 ஆவது பேரூந்தினை பொலனறுவை மெதிரிகிரிய தேசிய பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
பிரபஞ்சம் ஊடாக பாடசாலைகளுக்கு 354,200,000.00 ரூபா பெறுமதியான 72 பஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ‘மூச்சு’ திட்டத்தின் கீழ் 56 வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தின் மூலம் 32 பாடசாலைகளில் 27,986,150.00 ரூபாய் மதிப்பில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் நிறுவப்பட்டைள்ளன.
விவசாயிகளின் அரிசியை கொள்வனவு செய்ய முறையான வேலைத்திட்டமொன்று இல்லாதிருப்பதும்,அதன் காரணமாக அரிசிக்கு உத்தரவாத விலையொன்றை பெற்றுக் கொடுக்க முடியாததாலும் விவசாயிகளின் சமகாலம் போலவே அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று எமக்கு தேவைப்படுவது விவசாயிகளும் நுகர்வோரும் பாதுகாக்கப்படும் வகையிலான ஓர் விஞ்ஞான முறை விலை சூத்திரமே எனவும் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய விலைச்சூத்திரத்தின் மூலமே விவசயிகளும் நுகர்வோரும் பாதுகாக்கப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.