சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 35வது ஆண்டு நினைவெழுச்சி நாளினை நினைவுகூர்ந்து நடாத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியானது 25.05.2023 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. 

தமிழீழ விளையாட்டுத் துறை சுவிஸ்கிளையினால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது. 

எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வைப் பேணவும், மாவீரர்களின் வீரவரலாறுகள், தியாகங்களைப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியில்; உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற அனைத்துப் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றன. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசியக்கொடிகள்  கையேற்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன. இவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ விளையாட்டுத்துறை – சுவிஸ்கிளை

26.06.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்