பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியது என்பதை உலக நாடுகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தீவிரமடைந்துள்ள ஊழல் மோசடியால் இலங்கை புகழோடு வீழ்ச்சி நிலைக்கு செல்கிறது. நீதிதுறையின் பாதுகாப்பு மற்றும் சுயாதீனத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.

இயற்றப்படும் சட்டங்களினால் சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். ஆகவே இயற்றப்படும் சட்டங்கள் வெறும் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெறுகிறது. பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மீது நம்பிக்கை கொள்ள முடியாத தன்மை காணப்படுவதாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மூல அறிக்கையில்  சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியதே என  உலக நாடுகளும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. உள்ளக விசாரணையில் ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

மருதங்கேணி பகுதியில் எனக்கும்,பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு அதனை தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவு பெறுவதற்கு முன்னர் அவர் பொலிஸாரை பாதுகாக்கும் வகையில்  செயற்படுகிறார் என்பது தெளிவாக விளங்குகிறது. ஆகவே இவ்வாறான தன்மை முழுமையாக மாற்றமடையும் வரை ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்