ஒரு சமூகம் பல்வேறு துறைகளிலும் மேலெழும்புவதற்கும், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஐக்கியம் முக்கியமானதாக விளங்குகின்றது.பல மட்டங்களிலும் எதிரொலிக்கும் ஐக்கியமானது சாதக விளைவுகளுக்கு அடித்தளமாக அமையும்.இந்த வகையில் மலையக சமூகத்தின் எழுச்சியில் ஐக்கியமின்மை தாக்கம் செலுத்துவதாக பலரும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றமை தெரிந்ததாகும்.

இதில் குறிப்பாக அரசியல், தொழிற்சங்கவாதிகளின் ஐக்கியமற்ற செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாகவே விமர்சனங்கள் இருந்து வருகின்றன.இதனிடையே தற்போது மலையக அரசியல், தொழிற்சங்கவாதிகள் பேதங்களை மறந்து மக்களின் உரிமைகளுக்காக ஒன்று பட்டு குரல்கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளமை ஒரு வரவேற்கத்தக்க விடயமாக பலராலும் பேசப்பட்டு வருகின்றது.இந்த நல்ல சகுனம் தொடர்ந்தும் நிலைபெற வேண்டும் என்பதே பலரினதும எதிர்பார்ப்பாகும்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றமை  ஒரு முக்கிய விடயமாகும்.இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் உள்ளிட்ட பல காரணிகள் இம்மக்களின் இடப்பெயர்வுக்கு பிரதான காரணமாக அமைந்தன.1876 – 78 இல் ஏற்பட்ட பஞ்சம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடியதாக பலராலும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பஞ்சத்தால் தஞ்சாவூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.சுமார் 40 இலட்சம் பேர் வரை பஞ்சத்தால் உயிரிழந்ததாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.சராசரியாக ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு 22 மாதங்களுக்கு நாளாந்த பஞ்ச நிவாரணம் வழங்க வேண்டிய நிலை உருவானது.பஞ்சம் மக்கள் தொகை அதிகரிப்பு வீதத்தை குறைத்தது.

இப்பஞ்சத்தால் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் தொகையைக் காட்டிலும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களின் தொகை மிகவும் அதிகமாகுமென்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்தியாவின் தமிழகத்தில் இருந்து பல்வேறு காரணங்களால் உலகின் பல நாடுகளுக்கும் தீவுகளுக்கும் இடம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கிய துன்ப துயரங்கள் சொல்லிலடங்காது.

பலவிதமான சுரண்டல் களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளான இவர்கள்  அடிமைகளைப்போல் நடாத்தப்பட்ட வரலாறு மிகவும் துன்பகரமானதாகும். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்டு வெளிநாடுகளிலும், தீவுகளிலும் குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களில் பலர் இன்று தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத நிலையிலேயே வாழ்ந்து வருவதோடு அதிகளவில் சுதேச இனத்தவர்களுடன் கலப்புற்று விட்டதாகவும் கலாநிதி அருணாசலம் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.மேலும் அவ்வாறு கலப்புற்ற நிலையில் அவர்கள் பெருமளவு உரிமைகளுடனும் சலுகைகளுடனும் ஓரளவு வளத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

தொழிலாளர்களில் கணிசமானவர்களின் இளந்தலைமுறையினர் கல்வி கற்று பிற வேலை வாய்ப்புக்களைப் பெற்று முன்னேறத் தொடங்கியுள்ளனர் என்பதும் அவரின் கருத்தாகவுள்ளது.இந்நிலையில் இலங்கை வாழ் மலையக மக்கள் தொடர்பில் நாம் நோக்குகையில் அம்மக்கள் இன்னும் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையில் மிகவும் இக்கட்டான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றமை தெரிந்ததாகும்.இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.குடியிருப்பு, சமூக நிலைமைகள், தொழில்வாய்ப்பு, பொருளாதாரம், கல்வி என்று சகல துறைகளிலும் இம்மக்கள் பின்தங்கிய நிலைமையினையே கொண்டுள்ளனர்.

இம்மக்களின் அபிவிருத்தி கருதி அரசியல் தொழிற்சங்கவாதிகள் குரல் கொடுத்து வருகின்றபோதும் உரிய சாதக விளைவுகள் இன்னும் எட்டப்படவில்லை. ஆட்சியாளர்கள் இம்மக்களின் வாக்குகளின் மீது காட்டும் அக்கறையை இம்மக்களுக்கு உரிய சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் காண்பிக்கவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

” யானைப்பசிக்கு சோளப்பொறி ” என்ற ரீதியில் அவ்வப்போது சிற்சில உதவிகள் இம்மக்களுக்காக வழங்கப்படுகின்றதே தவிர இதயசுத்தியுடன் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட ஆட்சியாளர்களின் இந்த ஓரவஞ்சனையையும், நியாயமற்ற தன்மையையும்  கண்டித்துப் பேசி வருகின்றனர். “இலங்கையர்” என்ற பொதுவரையறைக்குள் மலையக மக்கள் நோக்கப்படாது  இனத்தை முன்னிலைப்படுத்தி ஓரங்கட்டப்பட்டு வருவதாக கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

இனவாத சிந்தனையாளர்கள் இந்நாட்டை குட்டிச்சுவராக்கிய வரலாறு கொடுமையானது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.சர்வதேசத்தின் மத்தியில் இதனால் தலைகுனியும் நிலைமையும் ஏற்பட்டது..நிலைமை இவ்வாறிருக்கையில் இனவாதிகள் இன்னும் திருந்தியதாக இல்லை.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இனவாதம் சிறுபான்மை மக்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இடையூறாக உள்ளது.இந்த வகையில் மலையக மக்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இத்தகைய இனவாதப் போக்குகளும் தடைக்கல்லாக உள்ளன என்பதனை மறுப்பதற்கில்லை.

பேரம் பேசும் சக்தி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தின் தனிப்பெரும் கட்சியாக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. அமரர் தொண்டமான் அரசியலில் “கிங் மேக்கராக ” விளங்கினார்.ஆட்சியில் அமரப்போகும் அரசினை தீர்மானிக்கும் வல்லமை அவருக்கிருந்தது.பேரம் பேசும்  சக்தியை மையப்படுத்தி ஆட்சியாளர்களை வலியுறுத்தி பல்வேறு உரிமைகளையும் மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அவர் முனைந்தார்.இது சாதக விளைவுகள் பலவற்றுக்கும் உந்துசக்தியானது என்பதையும் மறுப்பதற்கில்லை.எனினும் பிற்காலத்தில் இனவாதிகளின் கண்களை இது உறுத்திய நிலையில் அவர்கள் தங்களுக்குள் ஐக்கியத்தின் ஊடாக பலத்தை உருவாக்கிக் கொண்டு பேரம்பேசும் சக்தியை  மழுங்கடிக்கச் செய்வதில் வெற்றி கண்டனர்.இதனால் தொழிலாளர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டது.

இது ஒரு புறமிருக்க மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளின் ஐக்கியமற்ற போக்குகள், விரிசல் நிலை  என்பனவும் மலையக மக்களின் உரிமைகளுக்கு ஆப்பு வைத்து வருவதாகவும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வந்தன.ஆட்சியாளர்கள் இவ்விரிசல் நிலையை சாதகமாக்கிக் கொண்டு பிரித்தாளும் கொள்கையை முன்னெடுத்து மலையக சமூகத்தை வேரறுத்து வருவதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.  இதில் உண்மை இல்லாமலும் இல்லை.மலையகக் கட்சிகள் ஆளுக்கொரு பக்கமாக இழுத்துக் கொண்டு சுயநலனை மையப்படுத்தி காய் நகர்த்தல்களை மேற்கொண்டன.

இது தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைத்ததோடு அவர்களின் நலன்களையும் கேள்விக்குறியாக்கியது.இந்நிலையில் மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியமும் பலராலும் வலியுறுத்தப்பட்டது.வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் தமக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றபோதும் பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதாகவும், அத்தகைய ஒன்றிணைவு மலையக அரசியல்வாதிகளிடையேயும் எதிரொலிக்க வேண்டுமென்றும் பலரும் வேண்டிக்கொண்டனர்.

இந்நிலையில்  மலையக கட்சிகள் தமது கருத்து முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு சமூக நலனுக்காக இப்போது குரல் கொடுக்க துணிந்திருக்கின்றன.இது ஒரு நல்ல சகுனமாகும் என்பதோடு எதிரணியினருக்கு இது ஒரு சாட்டை அடியாகவும்  அமையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் எதுவாக இருந்தாலும் சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயங்காது.மலையக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் ஆயத்தமாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை மலையகத்தின் தொழிற்சங்க நிலைமைகள் தற்போது அதிருப்தியான வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன.தொழிற்சங்கங்கள் இலக்கு மாறிச் செயற்படுகின்றன.எனவே தொழிற்சங்கங்கள் தனது பிழைகளை திருத்திக் கொண்டு முன்செல்லவில்லையாயின் தொழிற்சங்க கலாசாரம் வலுவிழக்கும் சூழ்நிலை உருவாகும்.தொழிலாளர்களுக்கு இது ஒரு அபாய அறிவிப்பாகும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

தொழிற்சங்கவாதிகள் தொழிற்சங்கத்தின் ஊடாக அரசியலுக்கு செல்லும் காய்நகர்த்தலை மேற்கொள்வதால் தொழிலாளர் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.இதனிடையே மலையகத்தின் தொழிற்சங்கக் கட்டமைப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் வலியுறுத்தி இருக்கின்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமே தற்போது பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில் அம்மக்களின் ஏனைய பிரச்சினைகள் மூடிமறைக்கப்பட்டு வருகின்றன.இது அநீதியான செயலாகும்.சம்பளப் பிரச்சினைக்கு அப்பால் இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இன்னும் அதிகமுள்ளன.இந்நிலையில் ஆட்சியாளர்களை வலியுறுத்தி இவற்றுக்கான திர்வினைப் பெற்றுக் கொடுக்க மலையக கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கின்றன.

இந்திய வம்சாவளி மலையக  மக்களின் தேசிய அபிலாஷை கோரிக்கைகள் பல சிவில் சமூக கலந்துரையாடலில் இனங்காணப்பட்டு  தேசிய சர்வதேச அரங்குகளில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன முனைப்புடன் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ஏனைய கட்சிகளும் மக்களின் நலன்கருதி இத்தகைய பொதுவான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருதல் வேண்டும்.

கடந்த காலத்தில் மலையக மக்களின் மேம்பாடுகருதி தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் சமகால கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்ள அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதனை மறந்து விடுதல் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்