வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை (21) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்நிர்மாணம் என ஆரம்பிக்கப்பட்ட தொடர்பணி ஆரம்பித்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்தபோது இந்த பாடசாலையின் முதலாவது கட்டிடமும் என்னுடைய முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டது.

கல்வி என்பது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியை அதனுடைய அபிவிருத்தியை, ஆளுமையை , பல் திறன்களை சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம். எங்கு போனாலும் புலம்பெயர்ந்த சமூகம் மூன்று விடயங்களில் ஆர்வமாக இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். அதாவது தங்களுடைய பல்கலைக்கழக நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றார்கள், பாடசாலை நிகழ்வுகளிற்கு பாடசாலை புனர்நிர்மாணங்களுக்கு  இணைந்து கொள்கின்றார்கள், தமது கிராமங்களில் உள்ள ஆலயங்களின் புனர்நிர்மாணங்களுக்கு  இணைந்து கொள்கின்றார்கள்

வடக்கு கிழக்கிலே புலம்பெயர்ந்த சமூகத்தின் ஆதரவும் அவர்களின் அளப்பெரிய சேவையும்  பல இடங்களிலே நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்தவகையிலே கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்திருக்கின்ற ஆதரவென்பது  பார்க்கும் போது மிக அளப்பெரியதாக இருக்கின்றது.

வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194  பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். அதாவது பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள், இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு, இதே விடயம் நான் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக ஏழு வருடங்கள்  இருந்தபோது கிராமபுறங்களிலே பாடசாலைகளை மூடியிருந்தோம்.

அதற்கு பிரதேச செயலாளர்கள் கூறிய காரணம் பிறப்பு விகிதங்கள் குறைவடைந்து செல்கின்றது என முதலாம் வகுப்பிலே  மாணவர்களை அனுமானிப்பது  சில பாடசாலைகளில் பூச்சியம் லெவலுக்கு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்